Archives: ஜூன் 2024

உனக்கென்ன

"அவளுக்குத் திராட்சை லாலிபாப், எனக்கு மட்டும் ஸ்ட்ராபெரி லாலிபாப்பா?" என் சகோதரியின் ஆறு வயது மகள் கேட்டாள். குழந்தைகள், தாங்கள் பெறுவதையும் பிறர் பெறுவதையும் ஒப்பிட்டுப் பார்ப்பதை, என் சகோதரியின் பிள்ளைகள் ஆரம்பத்திலேயே எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இதன் பொருள் என்னவென்றால், ஒரு சித்தியாக , நான் நியாயமாகத் தீர்ப்பளிக்க வேண்டும்.

நானும் சில சமயங்களில் தேவன் எனக்குக் கொடுப்பதைப் பிறருக்குக் கொடுக்கப்பட்டதோடு ஒப்பிடுவேன். "எனக்கு ஏன் இது, அவளுக்கு மட்டும் அது?" என்று தேவனைக் கேட்டிருக்கிறேன். கலிலேயா கடலோரம் இயேசுவிடம் சீமோன் பேதுரு கேட்டதை என் கேள்வி எனக்கு நினைவூட்டுகிறது. பேதுரு தன்னை முன்பு மறுதலித்ததற்காக இயேசு அவனை மன்னித்தார். இப்போது ஒரு இரத்தசாட்சியான மரணத்தின் மூலம் தேவனை பேதுரு மகிமைப்படுத்தப் போவதாகக் கூறினார் (யோவான் 21:15-19). இருப்பினும், தம்மைப் பின்தொடரும்படியான இயேசுவின் அழைப்பிற்கு ஆம் என்று பதிலளிப்பதற்குப் பதிலாக, பேதுரு, “இவன் [யோவான்] காரியம் என்ன?” என்று கேட்டார். (வ. 21).

அதற்கு இயேசு, "உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்." (வ. 22). இயேசு நமக்கும் அதையே சொல்வார் என்று நான் நம்புகிறேன். நம் வாழ்வின் வழிகாட்டுதலை ஏற்கனவே அவர் நமக்கு அருளியிருக்கையில், ​​நம்மில் விசுவாசத்தை எதிர்பார்க்கிறார். நாம் நமது பாதையை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது, மாறாக நாம் அவரைப் பின்பற்றினால் போதும்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அப்போஸ்தலனாகிய பேதுரு, ஆதித்திருச்சபையின் தைரியமான தலைவராகத் தேவனைப் பின்பற்றினார். தீய பேரரசன் நீரோவின் கீழ் அவர் அச்சமின்றி மரணத்தைத் தழுவியதாகவும் வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன. நாமும் தேவனைப் பின்பற்றுவதில் உறுதியாகவும், கேள்விக்கு இடமில்லாமல் அவருடைய அன்பையும் வழிநடத்துதலையும் நம்புவோமாக.

 

நீ பிரியமானவன்(ள்)

தன் சோகத்தை வெளிப்படுத்த, அந்த இளம் பெண் மாலினி, ஒரு மரத் துண்டில், "“உண்மையைச் சொல்வதானால், நான் சோகமாக இருக்கிறேன். யாரும் என்னுடன் சேர விரும்பவில்லை, என்னை நேசிக்கும் ஒரே நபரையும் நான் இழந்துவிட்டேன். நான் தினமும் அழுகிறேன்" என்றெழுதி எழுதி பூங்காவில் வைத்துவிட்டாள்.

யாரோ ஒருத்தி அந்தக் குறிப்பைக் கண்டெடுத்தபோது, ​​பூங்காவிற்கு ஒரு பெரிய எழுத்துப் பலகையைக் கொண்டு வந்து, மக்கள் தங்கள் எண்ணங்களை மாலினிக்காக எழுதச் சொன்னாள். அருகிலுள்ள பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், "நாங்கள் உன்னை நேசிக்கிறோம்", "தேவன் உன்னை நேசிக்கிறார்", "நீ பிரியமானவள்" என்றெல்லாம் பல ஆதரவான வார்த்தைகளை எழுதிச் சென்றனர்.  பள்ளி முதல்வரும் "அவளிடம் உள்ள வெறுமை நிரம்பும்படி அவளுக்கு உதவிட நாம் எடுக்கும் சிறிய முயற்சி இது. அவள் நம் அனைவரையும் பிரதிபலிக்கிறாள், ஏனெனில் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் சோகத்தையும் துன்பத்தையும் அனுபவிப்போம் அல்லது அனுபவிக்கிறோம்" என்றார்.

"நீ பிரியமானவள்" என்ற வார்த்தை, மோசே இறப்பதற்குச் சற்று முன்பு  இஸ்ரவேல் கோத்திரமான பென்யமீனுக்கு அளித்த அற்புதமான ஆசீர்வாதத்தை எனக்கு நினைவூட்டுகிறது, " கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்" (உபாகமம் 33:12). மோசே தேவனுக்காக ஒரு வலிமையான தலைவராக இருந்தார், எதிரி நாடுகளைத் தோற்கடித்தார், பத்து கட்டளைகளைப் பெற்றார், தேவனைப் பின்பற்ற அவர்களுக்கு அறைகூவல் விடுத்தார். அவர் அவர்களைத் தேவனின் கண்ணோட்டத்தில் கண்டு மரித்தார். பிரியமானவன் என்ற வார்த்தையை நாமும் நமக்கு உரிமையாக்கிக் கொள்ளலாம். ஏனென்றால் இயேசு கூறினார், "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3:16).

இயேசுவின் ஒவ்வொரு விசுவாசியும் அவருக்கு "பிரியமானவர்கள்" என்ற சத்தியத்தில் உறுதியாக இளைப்பாறிட  அவர் நமக்கு உதவுவதால், மாலினியின் புதிய நண்பர்களைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க முற்படுவோம்.

 

நம்பிக்கையான எதிர்காலத்தைப் பார்த்தல்

2005 இல் கத்ரீனா புயலின் பேரழிவிற்குப் பிறகு, நியூ ஆர்லியன்ஸ் மெதுவாக மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. லோயர் நைந்த் வார்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும், கத்ரீனாவின் பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அதை மாற்ற பர்னெல் காட்லன் பணியாற்றினார். நவம்பர் 2014 இல், கத்ரீனாவுக்குப் பிறகு லோயர் நைந்த் வார்டில் முதல் மளிகைக் கடையைத் திறந்தார். "நான் கட்டிடத்தை வாங்கியபோது, ​​​​எல்லோரும் என்னைப் பைத்தியம் என்றெண்ணினார்கள். ஆனால் எனது முதல் வாடிக்கையாளரோ அழுது “தனது சுற்றுப்புறம் திரும்பக் கிடைக்குமென்று ஒருபோதும் நினைத்ததில்லை" என்றதை காட்லன் நினைவு கூர்ந்தார். அவரது தாயார் தனது மகன் “நான் பார்க்காத ஒன்றைப் பார்த்தான்.  அந்த வாய்ப்பை பயன்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி" என்றார்.

ஏசாயா தீர்க்கதரிசிக்கு, அழிவினூடே எதிர்பாராத நம்பிக்கையான எதிர்காலத்தைக் காணத் தேவன் உதவினார். "சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல்" (ஏசாயா 41:17) இருப்பதால் "வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்டபூமியை நீர்க்கேணிகளுமாக்(குவேன்)" (வ.18) என்று தேவன் வாக்குப் பண்ணினார். பசிக்கும், தாகத்திற்கும் பதிலாக, அவருடைய ஜனங்கள் மீண்டும் ஒருமுறை செழுமையை அனுபவிக்கும்போது, ​​"கர்த்தருடைய கரம் அதைச்செய்தது" (வ. 20) என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

அவரே இன்றும் புனரமைப்பின் ஆக்கியோன், "சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு" (ரோமர் 8:20) , சுதந்திரம் என்ற எதிர்கால நிலைக்கு உருவாக்கும் பணியில் கிறிஸ்து ஈடுபட்டுவிட்டார். அவருடைய நற்குணத்தில் (அன்பில்)நாம் நம்பிக்கை கொள்கையில், ​​நம்பிக்கை சாத்தியமாகும் எதிர்காலத்தைக் காண அவர் நமக்கு உதவுவார்.

 

வாழ்வின் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த இருபது கோடிக்கும் அதிகமான ஜனங்கள் புனித யாத்திரை செல்கின்றனர். காலங்காலமாக “ஒரு யாத்ரீகரின் நோக்கம் ஏதோவொரு ஆசீர்வாதத்தைப் பெற்றிட புனித ஸ்தலத்திற்குப் பயணித்தல்” எனப்  பலர் கருதுகின்றனர். 

எனினும், பிரிட்டனின் செல்டிக் கிறிஸ்தவர்கள் புனித யாத்திரையை வித்தியாசமாக அணுகினர். அவர்கள் திக்கு திசை அறியா காட்டுப் பகுதிகளுக்கோ அல்லது படகேறி கடல் இழுக்கும் போக்கிலோ பயணப்படுகிறார்கள். அவர்களுக்குப் பரிச்சயமில்லாத இடத்தில் தேவனை   நம்புவதே அவர்களின் யாத்திரை. அவர்களுக்கு ஆசீர்வாதம் இலக்கில் அல்ல, ஆனால் பயணத்தில் கிடைத்தது.

இவர்களின் வாழ்க்கை எபிரேயர் 11ஐ பிரதிபலிக்கிறது.  ஏனெனில் கிறிஸ்துவிலான வாழ்க்கை என்பது உலக வழிகளை விட்டு, தேவனின் நகரத்திற்கு அந்நியரைப் போலச் சாகச பயணம் செய்வதைப் போன்றது (வ.13-16) என வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது . கடினமான, நடந்திராத பாதையில் அனைத்திற்கும் தேவனையே நம்புவதன் மூலம், ஒரு யாத்ரீகர் முந்தைய விசுவாச வீரர்கள் வாழ்ந்துகாட்டிய விசுவாசத்தை பின்பற்றுகின்றனர்(வ.1-12).

நாம் உண்மையாகவே மலையேற்றம் செய்கிறோமோ இல்லையோ, நாம்   கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இதுவே: இயேசுவை நம்பியவர்களுக்கு, வாழ்க்கை என்பது பரலோக நாட்டிற்கு ஒரு புனிதப் பயணம். வழியோ இருண்ட காடுகள், முட்டுக்கட்டைகள் மற்றும் சோதனைகள் நிறைந்தது. நாம் பயணிக்கையில், ​​வழியெங்கிலும் தேவனின் பராமரிப்பை அனுபவிக்கும் பாக்கியத்தைத் தவறவிடாமல் இருப்போமாக.

 

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.